வடதாரகையை திருத்த 40 மில்லியன் தேவை – காங்கேசன்துறை துறைமுகத்தில் நீண்டகாலமாக தரித்துள்ளது என தெரிவிப்பு!

Tuesday, November 3rd, 2020

நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை கப்பலின் திருத்தப்பணிகளுக்கு 40 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி தேவைப்படுவதாக பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.குடா நாட்டின் தனித்தீவாக அமைந்துள்ள நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக சேவையில் ஈடுபடவில்லை. இதனால் பயணிகள் போக்குவரத்தில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவைகள் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள வடதாரகை மற்றும் குமுதினி ஆகிய படகுகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் வடதாரகை பயணிகள் போக்குவரத்து படகானது நீண்ட காலமாக பராமரிப்புக்கள் எதுவும் மேற்கொள்ளப்படுவதற்கான நிதியொதுக்கீடுகள் கிடைக்கப்பெறாது பழுதடைந்த நிலையில் உள்ளது.

அத்துடன் அது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படாமல் தற்போது காங்கேசன்துறை துறைமுகத்தில் நீண்டகாலமாக தரித்துள்ளது. கடந்த ஆண்டில் இதனை சீர் செய்வதற்கு 35.5 மில்லியன் ரூபா நிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்ட போதும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என தெரியவருகின்றது.

அத்துடன் வடதாரகையினை மீண்டும் சேவையில் ஈடுபடச் செய்வதற்கு 40 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி தேவைப்படுவதாக நெடுந்தீவுக்கு பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நீண்டகாலமாக சேவையில் ஈடுபட்டு வரும் குமுதினிப்படகும் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா தொற்று பரவலை அடுத்த நெடுந்தீவு பிரதேசத்தை போக்குவர்து உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் வெளி இடங்களுடன் 14 நாட்கள் முடக்கி வைப்பதற்கு நேற்றையதினம் பிரதேச செயலகத்தில் ஒன்றுகூட்டப்பட்டிருந்த அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: