பாதுகாப்பு வலயத்தில் திருடப்படும் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் – மீள்குடியேறிய பிரதேச மக்கள் கோரிக்கை!

Friday, June 8th, 2018

உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் ஊடாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் கால்நடைகள் அண்மைக்காலமாக திருடப்படும் அதே பிரதேசங்களுக்கு உள்ள பற்றைக்காடுகளுக்குள் வைத்து இறைச்சியாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதனைக் கட்டுப்படுத்துவதில் காங்கேசன்துறைப் பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்படுவதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏழாலை பகுதியைச் சேர்ந்த ஒர் திருட்டுக் கும்பல் மாடுகளை பிடித்து யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள இறைச்சி வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் செயற்பாடுகளுக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் காவல் கடமையில் ஈடுபடும் இராணுவத்தினர் உடந்தையாக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேரம் வரும் இந்த திருட்டுக் கும்பல் உள்ளே சிறுகுடிசைகளை அமைத்து சமைத்து அங்கேயே பொழுதைக் கழிப்பதுடன் மாடுகளைத் தடயம் வைத்துப் பிடிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.

மேலும் பொலிஸார் இல்லாத நேரம் பார்த்து அதிகாலை அல்லது இரவு நேரங்களில் பெரிய வாகனங்களுக்குள் போட்டு இலைகுழைகளை மறைத்து கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள கால்நடைகளை பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதன் மூலம் கால்நடை திருடர்களில் இருந்து இவற்றை பாதுகாக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டால் அவர்கள் தமது சுய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறித்த பிரதேசங்களுக்கு செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இந்த கால்நடைகளைத் திருடும் கும்பலை பிடிப்பதற்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களான சுன்னாகம், காங்கேசன்துறை, மற்றும் தெல்லிப்பழை, அச்சுவேலி, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை இரவு நேர சுற்றுக்காவல் கடமையில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் மீள்குடியேறிய மக்;கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts: