ஒரு வாரத்தில் 50 சிறுவர்கள் பாதிப்பு – டெங்கு தொற்று குறித்து கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல விசேட வைத்தியர் எச்சரிக்கை!

Wednesday, December 29th, 2021

ஒரு வாரத்திற்குள் டெங்கு நோயால் 50 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்  மேலும் கூறுகையில் –

டிசம்பரில் இதுவரையான காலப்பகுதியில் 624 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே, சிறுவர்கள் டெங்கு நோய்க்கு உள்ளாகுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பெற்றோர் முன்னெடுக்க வேண்டும்.

கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட நிலையில், லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறைவடைந்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டில் ஏற்பட்ட போது, நாளொன்றுக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருந்தது.

நேற்று முன்தினம் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவர்களில் சுமார் 200 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளங்காணப்படவில்லை.

இலங்கையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமைக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமையே இதற்கு காரணம்.

இதேவேளை சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதிலிருந்து விலகியுள்ளனர். இவர்கள் மிக வேகமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகலாம். எனவே, இவ்வாறானவர்களை இனங்காணப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: