இராணுவத்தினரே பல்கலைக் கழக மோதல் சம்பவங்களுக்கு காரணம் – சொல்லுகின்றார் சுரேஷ் பிரேமச் சந்திரன்!

Tuesday, July 19th, 2016

கிழக்குப் பல்கலைக் கழகம், மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகிய இரு பல்கலைக் கழகங்களிலும் மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல்களுக்கு இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினர்களுமே சூத்திரதாரிகள்.  இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினரும் சிங்கள மாணவர்களைத் தங்களுடைய தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.  சிங்கள மாணவர்களுக்குத் தங்கள் பாதுகாப்பைக் கொடுக்கிறோம் என்ற நம்பிக்கையை உருவாக்கி அவர்களைத் தமிழ் மாணவர்களுக்கு எதிராகத் தூண்டி விடும் முயற்சியில் அவர்கள் குறியாகவிருக்கின்றனர் எனத் தெரிவித்தார்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமனற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச் சந்திரன்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை(19-07-2016) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக் கழகத்தில் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல்  தொடர்பில் மிக மோசமான கருத்துக்கள் தென்னிலங்கை சிங்கள பெளத்த  இன வாத சக்திகளால் சொல்லப்பட்டு வருகின்றன. அனைத்துப் பல்கலைக் கழகங்களின் ஆசிரியர்களையும் இணைத்த பொதுவானதொரு சங்கமாகக் காணப்படும் தேசிய பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம்  யாழ்ப்பாணத்தில் திட்டமிட்ட வகையில் சிங்கள மாணவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஆகவே, இராணுவம் யாழ்ப்பாணத்தில் நிறுத்தப்படுவதன் மூலமாகவே சிங்கள மாணவர்களை பாதுகாக்க முடியுமென்ற வகையிலும்  மகாமோசமானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாணவனை ஆளுநர், உயர்கல்வி அமைச்சர் ஆகியோர்  சென்று நலம் விசாரித்திருக்கின்றனர். இந்த விடயத்தை ஊடகங்கள் அதிக முக்கியப்படுத்திச் செய்திகளாகப் பிரசுரித்திருக்கின்றன.

அதேவேளை, கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்களால் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது   அவர்களைக்  கிழக்கு மாகாண ஆளுநரோ, உயர் கல்வி அமைச்சரோ  அல்லது வேறு முக்கிய பதவியிலுள்ளவர்களோ சென்று பார்க்கவில்லை. தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட போது யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் மோதலுக்கு எழுப்பப்படும் கண்டனக் குரல்கள் போல குரல்கள் எவையும்  எழுப்பப்படவில்லை. காரணம்,கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் தமிழ் மாணவர்கள் என்பதாலேயாகும் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

Related posts: