நாட்டில் 15 ஆயிரத்து 763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு – சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பணியகம் தகவல்!

Friday, September 15th, 2023

நாட்டில் 15 ஆயிரத்து 763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மட்டத்திலான போசாக்கு நிலை குறித்த தரவுகளைப் பெறுவதற்காக கடந்த ஜூன் மாத நிறைவில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போஷாக்கு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

ஜூன் முதலாம் திகதி வரை, 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் வளர்ச்சி நிலை இதன்போது, மதிப்பீடு செய்யப்பட்டது.

குடும்பநல சுகாதார சேவையில் 5 வயதுக்குட்பட்ட 14 இலட்சத்து 6 ஆயிரத்து 213 சிறுவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்

அவர்களில், 13 இலட்சத்து 57 ஆயிரத்து 675 சிறுவர்கள் தொடர்பில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

குழந்தை ஆரோக்கியம் மற்றும் மேம்பாடு தொடர்பான வயதுக்கு ஏற்ற எடை அட்டவணையில், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் குறிக்கப்படும் வயதுக்கு ஏற்ற எடை குறைவாக இருக்கும் சிறுவர்களின் சதவீதம் 17 ஆக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, நுவரெலியா மாவட்டத்திலிருந்து அதிக எடை குறைவான சிறுவர்கள் பதிவாகியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நகர்ப்புறம், கிராமம் மற்றும் தோட்டங்கள் உட்பட அனைத்துத் பகுதிகளிலும் எடை குறைவான சிறுவர்கள் அதிகரித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: