நாடக ஒத்திகைக்கு வாளுடன் சென்றோர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சைக்குள்ளானது!
Monday, November 21st, 2016
நாடக ஒத்திகைக்காக வாள் எடுத்துச் சென்ற நாடக பயிற்சியாளர் மற்றும் மாணவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
யாழ்ப்பாணம் – கஸ்தூரியார் வீதியால் வாள் இரண்டை எடுத்துச் சென்ற ஆசிரியர் நாடக பயிற்றுனர் மற்றும் மாணவர் ஒருவர் ஆகிய இருவரும் கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இச்சம்பவத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இவர்களை கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சர் ஆகியோருக்கு எதிராக பொலிஸ் திணைக்களம் ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சரை பொலிஸ் திணைக்களம் பணித்துள்ளது. கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் வைத்து யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சர் ஸ்ரனிலஸ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவரின் வாக்குமூலத்திற்கு இணங்க மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் வாக்குமூலமும் அன்றே பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தகவல் தெரிவிக்கின்றன.

Related posts:
|
|
|


