நல்லூர் உற்சவத்தில் கொள்ளையிட காத்திருந்த குடும்பம் கைது.!

Sunday, August 7th, 2016

நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் திருட்டு வெலைகளில் ஈடுபடுவதற்காக புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வாடகை வீடு எடுத்திருந்த குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது –

யாழ்.நகரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சுன்னாகம் ஊடாக அளவெட்டி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையில் இருந்து நகை, பணம் மற்றும் கையடக்கதொலைபேசி என்பன திருடப்பட்டு உள்ளன.  அது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் சாரதிக்கு தெரிவித்ததை அடுத்து பேருந்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் பேருந்தில் பயணித்தவர்களிடம் சோதனை மேற்கொண்ட போது, களவு போன பொருட்கள் 17 வயதுடைய சிறுமியின் ஆடையினுள் நூதனமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் பொலிஸார் மீட்டனர்.

அதனை தொடர்ந்து சிறுமியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது தான், தனது தாய் மற்றும் தந்தையர் ஆகியோர் பேருந்தில் பயணித்ததாக தெரிவித்து உள்ளார். அதனையடுத்து சிறுமியின் தாய் மற்றும் தந்தையாரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது, தாம் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

அதனை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் கைது செய்யப்பட்ட குடும்பத்தினரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related posts: