தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டன!

Friday, May 10th, 2024

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி ) மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோர் கடந்த 07 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியதற்கு  அமைவாக, இரண்டு வீதிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் பொன்னாலை –  பருத்தித்துறை கடற்கரை வீதியில் பலாலி வடக்கு பாடசாலைக்கு அருகிலும், விமான நிலைய வீதியில் மருதடி சந்தியிலிருந்து பலாலி நோக்கி செல்லும்  வீரப்பளை வீதியும் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக விமான நிலைய வீதி ஊடகவும், ஒட்டகப்புலம் பிரதான வீதியூடாகவும் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வசாவிளான் கிழக்கு(J/244), வசாவிளான் மேற்கு(J/245), பலாலி வடக்கு(J/254), பலாலி கிழக்கு(J/253), பலாலி தெற்கு(J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.8 ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டது. இங்கு வசித்த 327 குடும்பங்கள் காணி உரிமை கோரி பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் 171 குடும்பங்களைச் சேர்த்தவர்கள் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி துப்பரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ஏனைய மக்களும் தங்களின் காணிகளை அடையாளப்படுத்தி, துப்பரவு பணிகளை ஆரம்பிக்க மிக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: