துறைமுகத்தில் சேதம் ஏற்படுத்தியவர்களுக்கு நடவடிக்கை – அமைச்சர் அர்ஜுன ரணதுங்க!

Sunday, December 18th, 2016

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் ஊழியர்கள் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு மீண்டும் கடமைக்குத் திரும்பிமை மகிழ்ச்சியளிப்பதாக துறைமுக கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேற்படி துறைமுக நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டவர்கள் மற்றும் வளங்களுக்குச் சேதம் விளைவித்தவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அனைவரும் நேற்று மதியம் கடமைக்குத் திரும்பியதாக துறைமுக அதிகார சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டைத் துறைமுக நிர்வாகத்தினருடன் தொழிற்சங்கக் குழு நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து ஊழியர்கள் கடமைக்குத் திரும்பியதாக ஹம்பாந்தோட்டைத் துறைமுக ஊழியர் குழுவின் தலைவர் ஐ. கே. ரமேஸ் தெரிவித்தார்.

தாம் கடமைக்குத் திரும்பினாலும் கையெழுத்தை வைத்துவிட்டு கோரிக்கையைத் தொடர்வதாக நேற்றுக் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழு தெரிவித்திருந்தது. இது தொடர்பில் தெரிவித்த துறைமுக அதிகார சபை அதிகாரி: அவ்வாறு அவர்கள் செயற்படுவார்களானால் அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மாகம்புர துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்குக் கையளிக்கப்படவுள்ள நிலையில் தம்மை துறைமுக அதிகார சபையில் இணைத்துக்கொள்ளக் கோரி துறைமுக ஊழியர்கள் கடந்த 7 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அவர்கள் துறைமுகத்தின் பிரதான வாயிலை மறித்து தமது ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். இவர்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவொன்றையும் ஹம்பாந்தோட்டைப் பொலிசார் நேற்று முன்தினம் பெற்றுக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிப்பதாகத் தெரிவித்த ஊழியர்கள், தாம் உண்ணாவிரதமிருந்த மேடையையும் பிரித்துக் கொண்டு நேற்று மதியம் துறைமுக வாசலுக்கருகில் தங்களுக்குள்ளே கூட்டமொன்றையும் நடத்தினர். அதன்போது காணப்பட்ட முடிவின் படி தேசிய கீதத்தோடு தமது போராட்டத்தை நிறுத்தி கடமைக்குத் திரும்ப தீர்மானித்ததாக ஐ. கே. ரமேஸ் தெரிவித்தார்.

அத்துடன் நேற்று முன்தினம் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவோடும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிணங்க நேற்றைய தினம் பிற்பகல் 2 மணிக்குள் கடமைக்குத் திரும்பாதவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவரென அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை; அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தமது தொழில் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் மீது நாம் நம்பிக்கை வைத்தே போராட்டத்தை நிறுத்தி கடமைக்குத் திரும்பியதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

colarjuna193326762_3903859_04012016_sss_cmy

Related posts: