தமிழ் மக்கள்  நல்லிணக்கம் பற்றி எதுவும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள் : பேராசிரியர் டி.எஸ்.ஐ. களுபோவில!

Saturday, August 27th, 2016

இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் அடிப்படையில் இனங்களுக்கிடையிலான ஒரு நல்லிணக்கம் என்ற கருப்பொருளில் ஒரு கருத்துகணிப்பொன்றை  நடாத்தியிருந்தோம். இதனடிப்படையில் எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையினைக் கட்டியெழுப்பத்  தற்போது முடியாததொரு சூழ்நிலை   காணப்படுகின்றது.   நாம் புதிய அரசாங்கம்  ஆட்சிப் பொறுப்பினைப்  பொறுப்பேற்ற பின்னரும்  நல்லிணக்கம் என்பது மக்கள் மத்தியில் ஒரு மாயை போன்றுள்ளது. அதுவும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இவ்வாறான நல்லிணக்கம் பற்றி எதுவும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள் என  இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் முகாமையாளர் பேராசிரியர் டி.எஸ்.ஐ. களுபோவில தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நிரந்தர சமாதானத்தை வேண்டி யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து அம்பாந்தோட்டை வரையான   நல்லிணக்கத்திற்கான அமைதி நடைபாதை ஊர்தி  பேரணி நேற்று வெள்ளிக்கிழமை(26) காலை 8.30 மணிக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர்க்  கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது.

குறித்த நடைபாதை ஊர்திப் பேரணியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,

தமிழ் மக்களுக்கான  சகல உரிமைகளும்  கிடைக்கவேண்டும் என்ற நோக்கிலும், நாட்டிலிருக்கும்  மூவின மக்களின் நலனுக்காகவும் இந்த நடைபயணம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.  நாட்டில் சமாதானத்தினை வேண்டித் தமிழ்,சிங்கள,முஸ்லீம் ஆகிய மூவீன மக்களின் நலனுக்காக இந்த நடைபவனி இடம்பெறுகிறது. நாங்கள் 25மாவட்ட ரீதியாகவும் சமூக நலனுக்காக   இவ்வாறான  நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இதனால் தான் நாங்கள் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான நடை பயணமொன்றை  யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாந்தோட்டைப்  பகுதி வரையில் ஆரம்பித்திருக்கின்றோம் எனவும்  இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் முகாமையாளர் பேராசிரியர் டி.எஸ்.ஐ. களுபோவில மேலும் தெரிவித்தார்.

Related posts: