ஏதோவொரு வகையில் இன்றைய பெண்கள் தங்களின் தனித்துவங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் : யாழ். பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தேவரஞ்சனி

Saturday, March 12th, 2016

இன்றைய பெண்கள் ஏதோவொரு வகையில் தங்களின் தனித்துவங்களை வெளிப்படுத்திய வண்ணமுள்ளனர். எங்களுடைய பெண்கள் சகல துறைகளிலும், சகல தொழில்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நிலையில் அவர்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது என யாழ். பல்கலைக் கழக மனித வள முகாமைத்துவப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி – தேவரஞ்சனி சிவாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

யாழ். சமூக செயற்பாட்டு மையம் நடாத்திய மகளிர் தின விழா நேற்று (11) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த முப்பது வருட காலமாக நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக பல குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக மாற்றம் பெற்றுள்ளன. அந்த வகையில் பெண்கள் வன்முறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற கருப்பொருளினை விடவும் பெண்களின் பங்களிப்புக்களை அங்கீகரிக்க வேண்டும். இன்று பெண்கள் பல்வேறு செயற்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையிலும் அவர்களுடைய வெற்றிகரமான வளர்ச்சிப் பாதையை மாறாது கொண்டு செல்வது என்பதும் சவாலானதொரு பணியாகவே உள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் யாழ். சமூக செயற்பாட்டு மையம் இவ் வருட மகளிர் தின விழாவில் முன்வைத்திருக்கின்ற கருப்பொருளை வெளிப்படுத்துவதாக எமது கிராமங்களிலுள்ள பெண் முயற்சியாளர்களை மையப்படுத்தி எமது பல்கலைக் கழக மாணவரிடையே இது தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. அது மாத்திரமன்றி எமது முகாமைத்துவ பீடம் இந்தியாவின் என்.ஐ .ரி நிறுவனத்துடன் இணைந்து எமது பெண் முயற்சியாளர்களையும் அதேவேளை இந்தியாவிலுள்ள பெண் முயற்சியாளர்களையும் ஒன்றிணைத்துப் பல்வேறுபட்ட செயற்பாடுகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் அ .நடராஜன் கலந்து கொண்டதுடன் சாதனை மகளிர் ஆறு பேர் விருதுகள் வழங்கியும்,பொன்னாடை போர்த்தியும் கெளரவிக்கப்பட்டனர்.

Related posts: