விற்பனை விலையில் மாற்றம் செய்வது தொடர்பில் கூறப்படவில்லை – மாகாண சபையின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு !

Friday, October 27th, 2017

பால் கொள்வனவு விலையை அதிகரிக்கக் கோரும் மாகாண சபையின் தீர்மானத்தை ஏற்க முடியாது என்று யாழ்.கோ மற்றும் வவுனியா கால்நடை கூட்டுறவுச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் என வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சின் செயலர் வரதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்தில் உள்ள பண்ணையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு யாழ்.கோ நிறுவனம் ஊடாக கொள்வனவு செய்யப்படும் பாலுக்கான கொள்வனவு விலையை 67 ரூபாவிலிருந்து 72 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை தீர்மானம் கொண்டு வந்திருந்தது.

இதன் படி மாகாணசபையின் தீர்மானம் வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் ஊடாக பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் யாழ்.கோ நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

நாம் அனுப்பி வைத்த கடிதத்துக்குச் சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் தமது கருத்தை எமக்கு அனுப்பி வைத்துள்ளன. மாகாண சபையினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் பெரிய சவால்கள் இருக்கின்றன. மாகாணசபையில் கொள்வனவு விலையை மட்டும் அதிகரிக்க வேண்டும் என்றே கோரப்பட்டுள்ளது. விற்பனை விலையில் மாற்றம் செய்வது தொடர்பில் கூறப்படவில்லை. இதனால் நாம் பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. அத்துடன் நிர்வாகச் செலவுகள் போன்றவற்றை கையாள முடியாத நிலை காணப்படும் என்று அவர்கள் பதில் அனுப்பியுள்ளனர்.

கூட்டுறவுச் சங்கங்கள் அனுப்பி வைத்துள்ள கருத்துக்களை நாம் மாகாணசபைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் அழைத்து நாம் மீண்டும் கலந்துரையாடவுள்ளோம் – என்றார்.

யாழ்.கோ நிறுவனத்தை விட நெஸ்லே நிறுவனம் சற்று அதிக பணம் கொடுத்து பாலைக் கொள்வனவு செய்கின்றது. யாழ்.கோ நிறுவனம் 67 ரூபாவுக்கு பாலைக் கொள்வனவு செய்து 80 ரூபாவுக்கு விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில் மேற்படி கொள்வனவு விலையை 67 ரூபாவில் இருந்து 72 ரூபாவாக அதிகரிக்க பொதுமக்கள் முறைப்பாட்டுக்குழு பரிந்துரை செய்கின்றது. இந்தப் பரிந்துரை உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும், பண்ணையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குமே என்று கூறி இந்தப் பரிந்துரையை மாகாண சபை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது.

இந்த நிலையில் யாழ்.கோ நிறுவனம் பண்ணையாளர்களிடமிருந்து பாலைக் கொள்வனவு செய்கின்ற போது பாலின் தரம் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று மாகாண சபையில் அண்மையில் தீர்மானிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: