செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டம்!

Tuesday, June 6th, 2017

செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டமொன்று மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகங்கள் கலைப்பீட இணைப்பாளர் கலாநிதி எஸ்.ரகுராம் தெரிவித்தார்.

செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்ட வரைவு தொடர்பான கலந்துரையாடல், மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவை மற்றும் ஊடக மறுசீரமைப்புக்கான செயலகமும் இணைந்து மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்காக இந்த கலந்துரையாடலை ஏற்பாடுசெய்திருந்தது.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது போன்று, செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது ‘இந்நிலையில் பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியில் இந்தச் சட்டவரைவு முன்வைக்கப்பட்டு, ஆலோசனை மற்றும்மு ன்மொழிவுகள் பெறப்பட்டு வரப்படுகின்றன’ என்றார்.

‘எமது நாட்டில் பத்திரிகை பேரவைச் சட்டம் இருக்கின்ற போதிலும், ஊடக நிறுவனங்களின் கடமைகளைக் கட்டுப்படுத்தும் சில சட்டங்கள் இருக்கின்றன. அவ்வாறிருக்காமல், ஊடகங்கள் சுயாதீனமாகச் செயற்படும் வகையில் இந்த செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டவரைவு உருவாக்கப்பட்டுள்ளது.செய்தி ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் மற்றும் இலங்கையின் செய்தி ஊடகங்களின் உயர் தொழில்சார் நியமங்களை பேணி முன்னேற்றும் குறிக்கோளுடன் செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்டத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் பேசும் மக்களின் குரல்களும் ஒலிக்க வேண்டும். அவர்களின் கருத்துகளும் இதில் உள்வாங்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்

Related posts: