சுலைமான் கொலை தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளங் காணப்பட்டனர்!

Friday, September 16th, 2016

பம்பலப்பிட்டியில் வசித்துவந்த செல்வந்தரான மொஹமட் சுலைமானின்  கொலையுடன்  தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் சாட்சியாளர்களால் அடையாங் காணப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி நிஷாந்த பீரிஸ் முன் இடம்பெற்றபோது, சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

பம்பலப்பிட்டி பகுதியில் வசித்துவந்த மொஹமட் சுலைமானின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09 சந்தேக நபர்கள் இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களில் நால்வர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களை அடையாளங் காண்பதற்காக ஐந்து சாட்சியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். ஐந்து சாட்சியாளர்களில் ஒருவர் நான்கு சந்தேக நபர்களையும் அடையாளங் கண்டுள்ள அதேவேளை, மற்றுமொரு சாட்சியாளர் மூவரை அடையாளங் காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த 09 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி இரவு செல்வந்த வர்த்தகரான மொஹமட் சுலைமான் பம்பலப்பிட்டி கொத்தலாவலை வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பிருந்து கடத்திச் செல்லப்பட்டார்.

இதனை அடுத்து கடந்த 24 ஆம் திகதி மாவனெல்ல ஹெம்மாந்தகம பகுதியில் இருந்து மொஹமட் சுலைமான் உருகுலைந்த  நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நிதி மோசடி தொடர்பில் மேலும் சில வர்த்தகர்களுக்கு எதிராக மொஹமட் சுலைமான் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு ஆகியவற்றில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: