மட்டு.சந்திவெளி பகுதி மக்களுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

Saturday, May 27th, 2017
மட்டக்களப்பு, சந்திவெளி பகுதி மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
சந்திவெளி கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் இன்று மாலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளரும், கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளருமான மாட்டின் ஜெயா கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது, நீண்டதொரு இடைவெளிக்குப் பின் எமது மக்களைச் சந்திப்பது ஓர் துரதிஷ்டவசமான நிகழ்வாக இருந்த பொழுதிலும், எமது மக்களுடன் ஒன்றரக் கலந்தவர்களாகவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் செயற்பட்டு வந்திருக்கின்றோம்.
மக்களின் நலனில் அக்கறையுள்ளவர்களாக கிடைக்கின்ற சந்தர்ப்பங்கள் யாவற்றையும் மதிநுட்பத்துடன், எமது மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எமது பணியாக கடந்த காலங்களில் அமைந்திருந்தது. ஆனால், எமது மக்கள் தமது அதிகூடிய வாக்குகளால் பாராளுமன்றத்திற்;கு அனுப்பி வைத்தவர்களோ, மக்களின் நலத்திட்டங்களை மறுதலிப்பவர்களாக, மக்களின் நிலைகளிலிருந்து சிந்திக்காதவர்களாக, தமது சமுதாய அந்தஸ்துடன் எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து அவர்களுக்குக் கிடைக்கின்ற நல்ல பல விடயங்களையும் எதிர்க்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.
அதுமாத்திரமன்றி, எமது மக்களின் பேரில் ஒதுக்கப்படுகின்ற நிதிகளைக்கூட, எமது மக்களின் கரம் சேர்க்காது மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பும் நிலையிலேயே நிர்வாகம் செய்வதாக இருப்பதே எமது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் நிலைப்பாடாக உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் எம்மால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் இடைவெளியை எதிர்வரும் காலங்களில் எமது மக்களின் மனங்கள் குளிர்ச்சியடையும் விதத்தில் மக்கள் பணியாற்றுவதின் மூலம் ஈடுசெய்வதே எமது கடமையாகின்றது.
யுத்த சூழலில் இருந்து மீண்ட எமது மக்களின் அரசியல், பொருளாதார, கல்விசார் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதோடு, இச்சமுதாயத்தில் சம அந்தஸ்துள்ளவர்களாக வாழ வைப்பதே இன்றைய எமது கனவாகிறது. ஆகவே, நம்பிக்கையுடன் எம்மோடு நீங்கள் அனைவரும் கரம் சேர்ப்பதே எம்மை அடுத்த கட்டம் நோக்கிப் பலத்துடன் முன்னகர்த்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: