இலங்கையில் 3 இலட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா – 7 ஆயிரத்து 366 பேர் மரணம் – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Monday, August 23rd, 2021

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 4 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 23 ஆயிரத்து 390 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 59 ஆயிரத்து 244 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 183 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்துற 366 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

யாழ் மாவட்டத்தில் கொரோனா  தொற்று தீவிரமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இறப்புகளும் அதிகரித்து செல்கின்ற போக்கு காணப்படுகின்றது.

இறுதியாகக் கிடைத்த தரவுகளின்படி 148 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 8616 நபர்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர் என மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி குறிப்பிட்டுள்ளது

அத்துடன் யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் 200 ஆக கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் யாழில் 30 வயதுக்கு மேல் 3 இலட்சத்து 44 ஆயிரத்து 766 பேர் இனங்காணப்பட்டனர். அதில் நேற்றுவரை 2 இலட்சத்து 83 ஆயிரத்து 358 பேர் ஒரு டோஸையும், ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 9 பேர் இரண்டு டோஸையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதில் எழுந்து நடமாட இயலாத முதியவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேநேரம் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பதிவுகளை மேற்கொண்டு கொழும்பிற்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளமுடியும். தற்பொழுது வைத்தியசாலைகளில் கூட இட நெருக்கடி  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே தற்போதைய சூழ்நிலையில்  அனைவரும் உணர்ந்து தமது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: