சீனி வரி குறைப்பின் பிரதிபலன் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022

சீனி வரி குறைப்பால், கிடைக்க வேண்டிய பிரதிபலனை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க அல்லது அதனை அரசாங்கம் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். வரிக் குறைப்பால் இலாபமடைந்தோரின் பெயர்கள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் கவனத்திற் கொண்டுள்ளதாகவும் சபையில் தெரிவித்த அமைச்சர், அந்த வரி குறைப்பு மூலம் இலாபமடைந்துள்ளவர்களின் பெயர்கள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பெறுமதி சேர் வரி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.

கொள்கை ரீதியான தீர்மானத்துக்கமைய சீனிக்கு மட்டுமின்றி பருப்பு, ரின் மீன் ஆகியவற்றுக்கும் வரி குறைப்பு செய்யப்பட்டது. துறை சார் நிபுணர்களின் ஆலோசனைக்கிணங்கவே இது மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் நுகர்வோரின் மாதாந்த அத்தியாவசிய உணவுப் பொருள் செலவுப் பட்டியலில் 500 ரூபாவை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது.

சீனி வரி குறைப்பு மூலம் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொண்டோரிடமிருந்து நாம் வருமான வரி அறவிட்டு, அதனைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இதனூடாக உச்சளவில் வருமானத்தை பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.  வரி அறவீடு மூலமே அரசாங்கத்தின் செலவினங்களை முன்னெடுக்க முடியும். நாட்டில் 40 இலட்சம் குடும்பங்கள் நிவாரணம் கோரி விண்ணப்பித்துள்ளன.

அத்துடன் பொருளாதார நெருக்கடி மூலம் ஏற்பட்டுள்ள சமூக நெருக்கடியை தீர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். வரி வருமானம் மூலம் மாத்திரமே அதனை ஈடு செய்து கொள்ள முடியும்.

வெளிநாட்டு அந்நிய செலாவணியை அதிகரித்துக் கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஈடுபட்டுள்ளோர் வருடத்தில் 3,000 டொலர்களை நாட்டுக்கு அனுப்புவார்களானால் இரண்டு சக்கர வாகனம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கும் 20 ஆயிரம் டொலர்களை அனுப்புவார்களானால் நான்கு சக்கர வாகனம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சீனி வரி குறைப்பு மூலம் 1,676 கோடி ரூபாவை அரசாங்கம் அர்ப்பணித்துள்ளது. அதன் மூலமாக பிரதிபலனை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது.எனினும் அதன் பிரதிபலன் மக்களுக்கு கிடைக்கவில்லை.

அவ்வாறு இழக்கப்பட்டுள்ள நிதியை மீள பெற்றுக் கொள்ளும் வகையில் பின் தொடர்ந்து சென்று அதனை மீளப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை வருமான வரி திணைக்களம் மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சுதந்திரமான அமைதியான சமூக வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குழுக்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு செயலாள...
நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதைப் போன்று சீனா மற்றும் ஜப்பானிடமிரு...
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள், போதைப் பொருள் விற்பனைகளை கட்டப்படுத்த விரைந்து எடுக்க வேண்டிய நடவடி...