சுதந்திரமான அமைதியான சமூக வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குழுக்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணி – ஜனாதிபதி நடவடிக்கை!

Wednesday, June 3rd, 2020

பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான சட்டபூர்வமான சமூகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான புதிய செயலணியொன்றை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஏற்படுத்தியுள்ளதுடன் அந்த புதிய செயலணி குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தலைமையில் புதிய செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படை தளபதிகள் பொலிஸ் தலைமையதிகாரி மற்றும் புலனாய்வு அதிகாரிகளை உள்ளடக்கிய சட்டத்தை மீறி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சமூக குழுக்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை களைவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சில பகுதிகளில் சுதந்திரமான அமைதியான சமூக வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இந்த குழுக்கள் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பும் புதிய செயலணியிடம் வழங்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் விமானநிலையங்கள் ஊடாக போதைப்பொருட்கள் இலங்கைக்கு வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பும் புதிய செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் காரணமாக ஏற்படும் சமூக நோய்களை தடுப்பது,வெளிநாடுகளில் இருந்தவாறு இலங்கையில் சட்டவிரோத சமூக விரோத நடவடிக்கைகளை ஈடுபடுபவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரமும் பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான புதிய செயலணியிடம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவதளபதி சவேந்திரசில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா,விமானப்படை தளபதி எயர் மார்சல் சுமங்கள டயஸ், பதில் பிரதிபொலிஸ்மா அதிபர்,தேசிய புலனாய்வு சேவையின் இயக்குநர்,தேசிய புலனாய்வு சேவையின் தலைவர் முப்படைகளின் புலனாய்வு பிரிவின் தலைவர்கள் உட்பட பல முக்கிய அதிகாரிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: