சுன்னாகம் பொலிசார் அடித்தே கொன்றனர் – நீதிமன்றில் வாக்குமூலம்!

Tuesday, July 26th, 2016

தமது நண்பரை ” உனக்கு தனி நாடு தேவையா ? ” என கேட்டே சுன்னாகம் பொலிசார் அடித்துக் கொலை செய்தனர். அதுமட்டுமல்லாது அந்த கொலையை தற்கொலையாக மாற்றி மரண சான்றிதழ் வழங்கியதாக மல்லாகம் நீதிமன்றில் சந்தேகநபர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இன்றையதினம்(25) திருட்டுகுற்ற சாட்டு வழக்கு ஒன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது குற்ற சாட்டப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலை ஆகி தமது வாக்கு மூலங்களை பதிவு செய்தனர். இதன்போது அவர்கள் குறிப்பிட்டதாவது-

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21அம் திகதி நாம் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு புத்தக பைகள் அன்பளிப்பு செய்தோம். அவ்வேளை அந்த இடத்திற்கு வந்த சுன்னாக பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் “நீங்கள் மாவீரர் தினத்தை முன்னிட்டு தான் புத்தக பைகள் வழங்குகின்றீர்களா ? ‘ என கேட்டனர்.அதற்கு நாம் “இல்லை , இது வறிய நிலையில் உள்ள மாணவர்கள் கல்வியை தொடர அவர்களுக்கு உதவுகின்றோம். ” என கூறினோம் அதனை தொடர்ந்து பொலிசார் அங்கிருந்து சென்று இருந்தனர். பின்னர் இரவு எங்கள் வீடுகளுக்கு வந்து எம் மீது திருட்டுக் குற்றம் சுமத்தி எம்மை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அன்றைய தினம் இரவு எமது உறவினர்கள் நண்பர்கள் என ஐவரை பொலிசார் கைது செய்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்தனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தினுள் சித்திரவதை செய்வதற்கு என பிரத்தியோக அறை ஒன்று உள்ளது அந்த அறைக்குள் எம்மை அழைத்து சென்றனர். அங்கு ஊரெழு இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ புலனாய்வு துறையினர் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த மூன்று தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எம் மீது திருட்டுக் குற்றம் ஒன்றினை சாட்டி எம் மீது சித்திரவதைகளை புரிய தொடங்கினார்கள்.

எம் மீது மின்சாரத்தை பாய்ச்சினார்கள் , கால் பாதங்களில் ஆணிகளை அடித்தார்கள் , கை பெருவிரலில் குழாய் ஒன்றினை நுழைத்து அந்த குழாயை மேல தூக்கி கட்டினார்கள். அதன் போது எமது முழு உடல் பாரமும் விரலிலேயே தூங்கியது. மேசைக்கு குறுக்கே கை கால்களை இழுத்துக் கட்டி தாக்கினார்கள்.

இவ்வாறு மிக மோசமான சித்திரவதைகளை எம் மீது சுன்னாக பொலிசார் மேற்கொண்டனர்.  இதன் போது எமது நண்பனான சுமன் என்பவரை இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி வைத்து ” உனக்கு தனி நாடு வேணுமா ? ” என கேட்டு தாக்கினார்கள்.  பொலிசாரின் மூர்க்க தனமான தாக்குதலால் நண்பனின் வாய் மற்றும் மூக்கால் இரத்தம் சொட்டி நண்பன் உயிரிழந்து விட்டான். அதனை அடுத்து எம்மை அந்த அறையில் இருந்து பொலிசார் அப்புறப்படுத்தி விட்டனர்.

பின்னர் உயிரிழந்த எமது நண்பனின் உடலை கொண்டே கிளிநொச்சியில் இரணைமடு குளத்தினுள் வீசியுள்ளனர். பின்னர் நண்பன் குளத்தில் வீழ்ந்து தற்கொலை என மரண சான்றிதழ் கொடுத்து பொலிசார் அதனை தற்கொலையாக மாற்றி விட்டனர்.  என தமது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டனர்.

அதனை தொடர்ந்து நீதவான் கட்டளை பிறப்பிக்கையில்-   தமது நண்பரை கொலை செய்ததாகவும் தம் மீது சித்திரவதை புரிந்ததாக சந்தேகநபர்கள் பெயர் குறிப்பிட்டுள்ள பொலிசார் அனைவரையும் உடனடியாக கைது செய்து மன்றில் முற்படுத்துமாறும்  அத்தனை பேரிடமும் பூரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு மூன்று மாத கால பகுதிக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும். எனவும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு இட்டார்.

அத்துடன் சந்தேகநபர்களிடம் , இந்த வழக்கினை கைவிடுமாறு எவரனும் கோரினாலோ அல்லது , மிரட்டினாலோ , வேறு விதமான அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் விடுக்கப்பட்டாலோ உடனடியாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

தேவை ஏற்படின் சந்தேகனபர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் நீதவான் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

 

 

Related posts: