சுன்னாகம் நீர் மாசு விவகாரம்: வடமாகாண சபை விவசாய அமைச்சரை நீதிமன்றில் ஆயர்!

வட மாகாண சபையின் ஏகோபித்த தீர்மானத்துக்கமையவே வடமாகாண சபையின் நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. ஆகவே வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மாத்திரம் தனிப்பட்ட வகையில் இதற்கு பொறுப்பல்ல எனத் தெரிவித்த வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி எம்.கே . முத்துக் குமார் அவரைக் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
சுன்னாகம் நீர் மாசு விவகாரம் தொடர்பான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (19-04-2016) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கழிவெண்ணை காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. கடந்த வழக்குத் தவணையின் போது மல்லாகம் மாவட்ட நீதவான் வாசஸ்தலத்தில் வடமாகாண விவசாய அமைச்சர் தனது சட்டத்தரணியூடாக ஆஜரான போது ஐங்கரநேசன் சார்பாக எழுத்து மூலமான சமர்ப்பணம் செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட போதும்அதனை ஏற்க மறுத்த நீதவான் அடுத்த வழக்குத் தவணையின் போது எழுத்து மூலமான சமர்ப்பணம் செய்யுமாறும் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று தனது சட்டத்தரணியூடாக மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ .யூட்சன் முன்னிலையில் ஆஜரான வடமாகாண விவசாய அமைச்சர் வடமாகாண சபையின் நிபுணர் குழு அறிக்கை மற்றும் கழிவெண்ணைப் பாதிப்புத் தொடர்பான ஏனைய ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.
சுன்னாகம் கழிவெண்ணைப் பாதிப்புத் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நீதிமன்றத்துக்குத் தெரிவிக்காமல் நிபுணர் குழுவை நியமித்தமை தொடர்பில் முன்னர் குற்றச் சாட்டப்பட்டிருந்தது . ஆனால்,இது தொடர்பாக வடமாகாண சபையின் அவைத் தலைவரால் நிபுணர் குழு நியமனம் இடம்பெறுவதற்கு முன்னதாக நீதிமன்றப் பதிவாளருக்குக் கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் சுன்னாகம் கழிவெண்ணைப் பாதிப்புத் தொடர்பில் நிபுணர் குழுவை நியமிக்கவிருக்கிறோம் எனவும் ,இந்த நிபுணர் குழுவில் உள்ளடக்கப்படவுள்ளவர்களின் பெயர் விபரங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த நிறுவனம் சீல் வைக்கப்பட்டிருந்த காலகட்டத்திலேயே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிபுணர் குழுவை நியமிப்பது தொடர்பில் தாம் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியிருந்ததாகச் சுட்டிக்காட்டியதுடன் இதுதொடர்பாக அனுப்பிய கடிதத்தின் பிரதியையும் அமைச்சர் ஐங்கரநேசன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ஜெ .ஜெயரூபன் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்,
இந்த வழக்கு தனிப்பட்ட நபருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கல்ல என்றார். மேலும் கழிவெண்ணைப் பாதிப்புத் தொடர்பில் உண்மைத் தன்மையைக் கண்டறியும் நோக்குடனும் ,பொதுமக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்களுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனும் நோக்கிலுமே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.
இதன் போது தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி, உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் ஆஜராகி கழிவெண்ணைப் பாதிப்பிற்குள்ளாகியுள்ள பகுதிகளிலுள்ள நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாத காரணத்தால் தொடர்ந்தும் குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டுமெனவும் , பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் எங்கிருந்து பெறப்பட்டு வழங்கப்படுகிறது? என்பது தொடர்பில் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். அத்துடன் கழிவெண்ணைப் பாதிப்புக் காரணமாகப் புற்றுநோய், மலட்டுத் தன்மை, குறைவிருத்தி போன்ற பல்வேறு நோய்த் தாக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக் காட்டினர் .
இரு தரப்பு வாதங்களையும் கருத்திலெடுத்த மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ .யூட்சன் அடுத்த வழக்குத் தவணையின் போது தீர்ப்பினை வழங்குவதாகத் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை மே மாதம் -03 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தும் நீதவான் உத்தரவிட்டார்.
Related posts:
|
|