சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்திற்கு களங்கம் ஏற்படுகின்றது – களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, October 26th, 2023

உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், அவ்வாறான செயற்பாடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் நாடாளுமன்ற கட்டிடக் தொகுதிக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று கூடியது.

இந்த சந்திப்பின் போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையிலான குழு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த உட்பட சம்பவத்துடன் தொடர்புடைய சகல தனிநபர்களையும் சாட்சி வழங்குவதற்கு அழைப்பு விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த குழு எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளதுடன், சாட்சியங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 20 ஆம் திகதி மூன்று உறுப்பினர்களிடையே அமைதியின்மை ஏற்பட்டது.

முன்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோரினால் தாம் தாக்குதலுக்கு உள்ளானதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்..

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான விசாரணைக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ச, கயந்த கருணாதிலக்க, இமித்யாஸ் பாக்கீர் மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

இதனிடையே, இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை குழுவில் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குழு அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்ட பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: