2023 பாதீடு – இறுதி வாக்கெடுப்புக்கு தயாராகும் சட்டவாக்க சபை!

Thursday, December 8th, 2022

2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின், குழுநிலை விவாதம் எனப்படும் 3 ஆம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இன்றையதினம், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் கொள்கை வகுப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், கடந்த மாதம் 14ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெற்று, கடந்த 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது, 37 மேலதிக வாக்குகளால், இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.

அதற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதேநேரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தது.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பன வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்த நிலையில், அதன் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டபிள்யு டீ.ஜே.செனவிரட்ன, பிரியங்கர ஜயரட்ன ஆகியோர் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்தநிலையில் இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்குவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: