தீவிர தேடுதல் நடவடிக்கை: மலேசியாவில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் கைது!

Friday, October 11th, 2019


சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை கைது செய்ய மலேசிய குடிவரவுத்துறை கடந்த ஒரு வாரமாக நடத்திய தேடுதல் வேட்டைகளில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக 102 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Taman Desa Petaling, Kotaraya Complex, Taman Miharja, Jalan Alor, Bukit Jalil உள்ளிட்ட பகுதிகளில் நடந்த இத்தேடுதல் வேட்டையில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், சிரியா, இந்தோனேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைதாகியுள்ளனர்.அதே போல், மலேசியாவின் செலாங்கூர் மாநிலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 127 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று வெவ்வேறு தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் முறையான ஆவணங்களின்றி பணியாற்றி வந்த 93 இந்தோனேசியர்கள், 16 இந்தியர்கள், 8 மியான்மரிகள், 7 வங்கதேசிகள், 2 நேபாளிகள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் உள்பட 127 பேர் கைதாகியுள்ளனர் என மலேசிய குடிவரவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சட்டவிரோதமான முறையில் பணியாற்றிவரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த ஆண்டுக்குள் வெளியேற வேண்டும் என மலேசிய அரசு கெடு விதித்திருந்தது.‘Back for good’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் சட்டவிரோதமாக மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டினர் வெளியேற அறிவுறுத்துகின்றது.

இத்திட்டத்தின் கீழ் மலேசியாவிலிருந்து வெளியேறுபவர்கள் 700 மலேசிய ரிங்கட்டை ( இந்திய மதிப்பில் சுமார் 11 ஆயிரம், இலங்கை மதிப்பில் 28 ஆயிரம்) அபராதமாக செலுத்த வேண்டும்.கடந்த ஆகஸ்ட் 1 அன்று நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இத்திட்டம் டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்றாலும், இன்னொரு புறம் தேடுதல் வேட்டை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 முதல் ஆகஸ்ட் 2018 வரை நடைமுறையில் இருந்த மன்னிப்புத்திட்டத்தின் மூலம் 840,000 வெளிநாட்டினர் மலேசியாவிலிருந்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: