சாட்சியம் வழங்க விருப்பமில்லையென அர்ஜூன் அலோசியஸ் அறிவிப்பு!
 Friday, September 15th, 2017
        
                    Friday, September 15th, 2017
            ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்க தமக்கு விருப்பமில்லையென அர்ஜூன் அலோசியஸ் உத்தியோகப்பூர்வமாக ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன உள்ளிட்ட சட்டத்தரணிகளுடன் வருகை தந்த அர்ஜூன் அலோசியஸ் நேற்று ஆணைக்குழு அறிவித்த விடயம் தொடர்பில் தமது தீர்மானத்தை அறிவித்தார்.
சட்ட ஆலோசனைகளைப் பெற்ற பின்னர் தாம் சாட்சி வழங்காமல் இருக்கத் தீர்மானித்ததாக அர்ஜூன் அலோசியஸ் இன்று குறிப்பிட்டார்.
அர்ஜூன் அலோசியஸ் தொடர்பில் எழுந்துள்ள விடயங்கள் மற்றும் அவரின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை நிராகரிப்பதாக இருந்தால், ஆணைக்குழு முன்பாக உள்ள மற்றும் முன்வைக்கப்படும் சாட்சியங்களை அடிப்படையாக வைத்து செயற்பாடுகளை முன்னெடுப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, அர்ஜூன் அலோசியஸின் பிரத்தியேக உதவி அதிகாரி ஸ்டீவ் சாமுவேல் இன்றும் ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் விசாரணை அதிகாரிகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வந்திருந்தார்.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேனவிடம் இன்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக்க குறுக்குக்கேள்விகளைத் தொடுத்தார்.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் நிதிப் பிரச்சினையை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் அதனை ஈடுசெய்வதற்காக ஊழியர் சேமலாப நிதியத்தைப் பயன்படுத்தியமைக்கான சாட்சியங்கள் உள்ளதாக இதன்போது தெரியவந்தது. பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு கட்டமைப்பில் இதற்கு முன்னர் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு மீண்டும் பெறப்பட்ட ஒலிப்பதிவு இன்று மீண்டும் செவிமடுக்கப்பட்டது.
விலை மனுவின் போது அதனைப் பெற்றுக்கொள்வதற்காக முன்கூட்டியே தகவல்களைப் பெற்றுக்கொண்டமை, கொள்வனவு செய்த முறிகளை இறுதியில் அதிக விலைக்கு ஊழியர் சேமலாப நிதியத்திற்கு விற்பனை செய்தமை போன்ற காரணங்களால் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் அதிகூடிய இலாபத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக்க குறிப்பிட்டார்.
அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேனவிற்கு விலை மனுவின் வெட்டுப்புள்ளி தொடர்பில் அறிவுரை வழங்கியுள்ளதாக மிலிந்த குணதிலக்க இன்று ஆணைக்குழுவில் குறிப்பிட்டார்.
சிறந்த சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அர்ஜூன் அலோசியஸ் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளில் நேரடியாகத் தலையிட்டுள்ளதாக இன்று ஆணைக்குழுவில் தெரியவந்தது. பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சரியான மற்றும் இரகசிய நிதிசார் தகவல்கள் கிடைத்தமையினால், நிறுவனம் அதீத இலாபத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஒரு தொலைபேசி உரையாடலில் குறிப்பிடப்படும் விகிதங்களைக் குறைப்பதற்கான தீர்மானம் தொடர்பில் நிதிச்சபையின் சிபாரிசுகளை யார் வழங்கியது என்பது தொடர்பிலும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று கேள்வி எழுப்பியது.
முறிகள் ஏலத்தில் விடப்பட்ட தினமான 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி இந்த தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை நிதிச்சபை கூடி அந்த சிபாரிசு தொடர்பில் கலந்துரையாடியுள்ளது. தொலைபேசி உரையாடலில் அர்ஜூன் அலோசியஸ் பயன்படுத்தும் சில வசனங்கள் தொடர்பில் கசுன் பாலிசேனவிடம் வினவிய போது, அது அலோசியஸ் பயன்படுத்தும் வசன நடையென பதிலளித்தார்.
அர்ஜூன் அலோசியசுக்கு நிதிசார் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறையொன்று காணப்பட்டதாக அந்த உரையாடல் மூலம் ஆணைக்குழுவிற்கு புரிந்துகொள்ள முடிந்ததாக இன்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        