கோப்பாய் வாள் வெட்டு : சந்தேக நபர்கள் புறக்கோட்டையில் கைது!

Tuesday, August 8th, 2017

கோப்பாய் பிரதேசத்தில் சமீபத்தில் இரண்டு பொலிஸாரை வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் ஆறு சந்தேநபர்களை கைது செய்ய முடிந்திருந்திருப்பதாக பயங்கரவாத விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் இருவர் வழங்கிய வாக்குமூலங்களுக்கமைய மேலும் மூவர் பின்னர் கொழும்பு புறக்கோட்டை மற்றும் மட்டக்குளி பகுதிகளில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடமையிலிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இனந்தெரியாதோரின் வாள் வெட்டுக்கு இலக்காகியிருந்தனர்.

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் ஆறு சந்தேக நபர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் நேரடி தொடர்புபட்ட பிரதான சூத்திரதாரியாக நிஷா விக்டர் என்றழைக்கப்படும் சத்தியவேலி நாதன் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் திருநல்வேலி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கோப்பாய் சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் யாழ்ப்பாணத்திலும், பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட மூவர் கொழும்பு புறக்கோட்டையிலும் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டனர். அதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் ஒருவர் நேற்று முன்தினம் இரவு மட்டக்குளியில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு வாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட ராஜ்குமார் ஜெயக்குமார் அல்லது வினோத் என்றழைக்கப்படுபவரும் கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த குலேந்திரன் மனோஜித் அல்லது மனோஜ் என்றழைக்கப்படுபவருமே நேற்றுக் காலை புறக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டவர்களாவர்.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் போல் என்பவர் மட்டக்குளி பிரதேசத்திலும், இனுவில் பிரதேசத்தைச் சேர்ந்த சிறிகாந்தன் குகதாஸ் என்பவர் யாழ்ப்பாணத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் பருத்திதுறை நீதவானின் உத்தரவின்பெரில் எதிர்வரும் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: