கோப்பாயில் வாள் முனையில் கொள்ளை!

Saturday, December 3rd, 2016

கோப்பாயில் கொட்டும் மழை பெய்து கொண்டிருந்தபோது நேற்றையதினம்(02) அதிகாலை வீட்டின் முன்கதவை உடைத்து வாள் முனையில் இளம் தம்பதிகளை அச்சுறுத்தி 25 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.  ஏழு பவுண் தாலிக் கொடி மற்றும் சங்கிலி, மோதிரம், காப்பு ஆகியனவே இவ்வாறு திருட்டுப் போயுள்ளன.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை-01.30 மணியளவில் யாழ்.கோப்பாய் மத்தி அண்ணமார் கோவிலடியிலுள்ள வீடொன்றின் முன்னாள் வெளிச்சம் வருவதைக் கண்ட வீட்டிலிருந்தவர்கள் கள்ளன்…. எனக் கத்தியவாறு வீட்டின் முன்னாலுள்ள மின்குமிழை எரிய விட்டுள்ளார்கள்.

இதன் போது வீட்டின் பின்பக்கத்திலிருந்து முன்னரே எடுத்து வைத்திருந்த அலவாங்கால் முன்கதவையுடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் வாள் மற்றும் கொட்டன்களுடன் வீட்டிலிருந்தவர்களைக் ‘கத்தினால் கொல்லுவோம்’ எனக் கடுமையாக அச்சுறுத்தி விட்டு வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். இதன் போது வீட்டினுள்ளே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்த திருடர்கள் காசு எங்கே? என வீட்டு உரிமையாளரான பெண்மணியை அதட்டிக் கேட்டுள்ளனர். பெண்மணி காசு எதுவுமில்லை என்று கூறவே தங்க நகைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

unnamed (1)

Related posts: