கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

Friday, November 26th, 2021

கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பெல் 212 ரக விமானங்கள் மற்றும் ட்ரோன் பயன்படுத்தி இலங்கை பொலிஸாருடன் இணைந்து இலங்கை விமானப்படை கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

கோவிட் தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணத் தடைகள் நீக்கப்பட்டதன் பின்னர் கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்ததாக விமானப்படைப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் நிலைமையை கண்காணிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் பணிப்புரையின் பேரில், பெல் 212 ரக உலங்குவானூர்தி ஒன்று கொழும்பு பிரதேசம் முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

புதிய களனி தியத உயன, பஞ்சிகாவத்தை, ஆயுர்வேத சுற்றுவட்டம், லோட்டஸ் சுற்றுவட்டம் மற்றும் பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகள் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: