கூட்டமைப்பைக் கடுமையாகச் சாடுகின்றார் சிவாஜிலிங்கம்!

Sunday, November 20th, 2016

எந்தக்  கட்சியாகவிருந்தாலும் ஆக்கபூர்வமான நிவாரணங்களைப் பெற்றுத் தீர்மானங்களைப் பரவலாக எல்லோருடைய பங்களிப்புடனும் எடுக்கின்ற போதுதான் அந்தத் தீர்மானம் வெற்றிகரமாக அமையும்.

ஆனால், இன்று எமது கட்சிக்குள் கூட்டித் தீர்மானம் மேற்கொள்ளாமலேயே உங்கள் பெயரில் எங்கள் தெரிவு என நடந்து கொண்டிருக்கின்றது. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகின்ற போது மாண்புமிகு சம்பந்தன் ஐயாவும், சுமந்திரன் ஐயாவும் தான் பங்குபற்றுகிறார்கள். எங்களுடைய தலைவர்களுக்கு என்ன இருக்கிறதோ தெரியவில்லை என கடுமையான விசனத்தை வெளியிட்டார் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாக்களித்தனர். ஏன் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சில  நிபந்தனைகளைப் போட முடியாது? வலிகாமத்தில் ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதியை இரண்டு மாத காலத்திற்குள் விடுவிக்க வேண்டும்? மாவீரர் தியிலுமில்லங்களிருந்து இராணுவத்தினரை அப்புறப்படுத்துங்கள் போன்ற கோரிக்கைகளை ஏன் முன்வைக்க முடியாது?

ஆனால், அவ்வாறான கோரிக்கைகளை கூட்டமைப்பினர் இதுவரை முன்வைக்கவில்லை. ஆனால், இவ்வாறு வைக்க வேண்டிய அழுத்ததைப் பொதுமக்களும் கொடுக்க வேண்டும். கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர்கள் எங்களைக் கேட்டா வரவு செலவுத் திட்டம் மீதான வாக்களிப்புப் பற்றித் தீர்மானிக்கிறார்கள்?  நான் சார்ந்த ரெலோ இயக்கமென்றால் எங்கள் இயக்கத்தின் தலைமைக் குழுவோ அல்லது வேறு உறுப்பினர்களோ இந்த வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கவில்லை.

கடந்த வருடம் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது நாங்கள் பங்குபற்றக் கூடாது என ரெலோ இயக்கம் தீர்மானித்திருந்தது. ஆனால், எங்கள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அதில் பங்குபற்றவில்லை. ஆனால், எங்களுடைய மற்றைய உறுப்பினரான கோடீஸ்வரன் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்திருக்கிறார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் பகிரங்கமாகக் கூறிய போது இந்தத் தடவை மன்னிப்பு வழங்குமாறு தெரிவித்திருந்தார்கள் என்றார்.

unnamed (1)

Related posts: