கொப்பி, உள்ளிட்ட கற்றல் உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரிப்பு – வறிய மாணவர்கள் பெரும் அவதி – பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர் பெருங்கவலை!

Monday, November 7th, 2022

பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அப்பியாகச் கொப்பிகள் மற்றும் பென்சில் பேனைகள் உள்ளிட்ட அனைத்து கற்றல் உபகரணங்களும் சடுதியாக மூன்று மடங்கு விலை அதிகரித்துள்ளதால் மாணவர்கள் தமது தேவைகளுக்காக அவற்றை கொள்வனவு செய்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து பொருட்களும் விலை அதிகரிப்பு செய்யப்பட்டன. ஆனால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளமையானது மாணவர்களது குறிப்பாக வறிய மாணவர்களது கற்றல் நிலைமையை மிகவும் மோசமாக்கியுள்ளதாகவம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் இன்றைய சூழ்நிலை காரணமாக பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லாது கல்வியை விட்டு விலகும் நிலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக வடக்கில் மிக அதிகளவான மாணவர்கள் இடைவிலகி செல்வதாகவும் துறைசார் தரப்பினரை மேற்கோள்காட்டி நாளாந்தம் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதற்கு பெற்றோரிகளிடம் காணப்படும் பொருளாதார நெருக்கடியும் அதனால் மாணவர்கள் தமக்கான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் உருவாகும் இயலாமையும் மிக முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

அந்தவகையில் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி குறித்த பொருட்களை மலிவாக கிடைப்பதற்கான வழிகவகைகளை செய்வதற்கு குறிப்பிட்ட தரப்பினர் முன்வரவேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதேவேளை அச்சுத் தொழிலில் பயன்படுத்தப்படும் காகிதம் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், அப்பியாச புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் உட்பட அனைத்து எழுதுபொருட்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில், எழுதுபொருள் விற்பனை சுமார் 50% சரிவு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: