இலங்கையில் 5 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா மரங்கள் – கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அனைத்து அரச வைத்தியசாலைகளும் தயார் நிலையில் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Saturday, August 7th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 792 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 24 ஆயிரத்த 221 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 31 ஆயிரத்து 95 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 44 பெண்கள் மற்றும் 54 ஆண்கள் உட்பட மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண்களில் 33 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் 11 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமாயின் , போதுமான சுகாதார ஊழியர்கள் இல்லாத இடங்களுக்கு மாற்று திட்டங்களை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, முப்படையினர் மற்றும் தனியார் துறையினரை சேர்ந்தவர்களை சிகிச்சைகளுக்காக உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு நாட்டிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நோயாளர்களை ஏற்றிச்செல்வதற்கு அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் மாற்று திட்டங்களை மேற்கொள்ளுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: