குடாநாட்டில் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது!

Tuesday, April 26th, 2016

குடாநாட்டின் பல பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவொன்றை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.சிறீகஜன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவர்களைக் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைக்குழு தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.சிறீகஜனுக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இதனையடுத்து இந்தக் கொள்ளைக்குழுவின் பிரதான செயற்பாட்டாளரான அன்ரன் நித்தியராசா அனிஸ்ரன் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

கொள்ளையிட்ட பொருளொன்றை வேறொருவருக்கு விற்பதற்காக முயற்சித்த போதே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண் ஒருவர் உட்பட மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குருநகரைச் சேர்ந்த சண்முகதாசன் டெனிஸ்ரன் (வயது 19), கொழும்புத்துறையைச் சேர்ந்த தர்மராசா நிஷாந்தன் (வயது 20), மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெகன் சாளினி (வயது 40) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் கடந்த 15 ஆம் திகதி சில்லாலை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 12 பவுண் நகைகளையும் இரண்டு விலையுர்ந்த கையடக்கத் தொலைபேசிகளையும் மோட்டார்சைக்கிள் ஆவணங்களையும் திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் கோப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து விலையுர்ந்த மோட்டார் சைக்கிள் இரண்டையும் மடிக் கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசிகளையும் திருடியுள்ளனர்.

அதனைவிட வேறு இடங்களில் இருந்தும் கைதொலைபேசிகளை திருடியமையும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: