கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் முல்லைத்தீவில் விசேட கலந்துரையாடல்!

Thursday, April 18th, 2024

கடற்தொழில் மீனவர்களுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம்(18) முல்லைத்தீவில்  இடம்பெற்றது.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், புதிய சட்டமூலம் தொடர்பாக பணிப்பாளர் நாயகத்துடன் இணைந்து அமைச்சின் சிரோஸ்ட ஆலோசகர் தவராசா வளவாளராக கலந்து கொண்டு சட்டமூலம் தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கினார்.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சின் உத்தியோகத்தர்கள், சமாச உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

குறித்த கலந்துரையாடலில், மீன்பிடி நடவடிக்கை உரிமம் வழங்கலின் பொதுவான கோட்பாடுகள், மீன்பிடி உரிமத்தின் கால எல்லை, மீன்பிடி நடவடிக்கை உரிமங்களின் கைமாற்றம், வெளிநாட்டு கலன்கள் மூலம் இலங்கை நிலப்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதலை தடை செய்தல், இலங்கை நிலப்பரப்புகளில் மீன்பிடி செயற்பாடுகளை நடாத்துவதற்கான மீன்பிடி உரிமமொன்றை புதுப்பித்தல் போன்ற  பல்வேறு விடயங்கள் தொடர்பிலும்  கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: