கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Thursday, May 9th, 2024

கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , IMF இன் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அரசாங்க சோதனை அறிக்கையின் (Governance Diagnostic Report)  அடிப்படையில் ஊழலுக்கு எதிரான வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(09) நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

சமுர்த்தி நிவாரணத்தை விட மூன்று மடங்கிற்கும் அதிகமான தொகை வறிய மக்களுக்கு வழங்கப்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த நிவாரணத் திட்டங்களுக்காக 205 பில்லியன் ரூபா செலவிடப்படும் எனவும், இதற்கு முன்னர் இந்தளவு பாரிய தொகை வறிய மக்களுக்காக ஒதுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்..   

அத்துடன் ரூபா வலுப்பெற்றதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கமைய எரிவாயு, எரிபொருள், பால் மா ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளதாகவும் வட்டி வீதம் குறைந்தமையால் தொழில் முனைவோருக்கு அதிக வசதி, வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 1930 இற்குப் பிறகு, சுமார் 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உரிமைகளை வழங்கும்  ‘உறுமய’ திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் ஊடாக முழுமையான காணி உறுதி அவர்களுக்குக் கிடைக்கும் எனவும் இந்த வேலைத் திட்டத்தால், இலங்கை முழுவதிலும் ஆயிரக்கணக்கான விவசாய வர்த்தகர்கள் உருவாவதைத் தடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: