கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய விழா  தொடர்பில் தமிழக முதல்வர் இந்திய பிரமருக்கு கடிதம்!

Friday, December 9th, 2016

 

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய பிரதிஷ்டை விழாவில், தமிழக யாத்திரீகர்கள் அனைவரும் எந்தவித கட்டுப்பாடின்றி கலந்து கொள்ளுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கச்சத்தீவில் புனித அந்தோனியார் தேவாலய கட்டிடம்  புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த தேவாலயத்தின் பிரதிஷ்டை விழா தள்ளிபோய் உள்ளது. இந்த தேவாலயத்தின் திறப்பு விழாவில் தமிழக மீனவ சமூகத்தைச்சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வதற்கு உரிய அனுமதியை பெற்றுத்தர வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேணடும்;

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய புதிய கட்டிட திறப்பு விழா 7-12-2016 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தமிழக அரசு தலைமைச்செயலாளர், வெளியுறவுத்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் தமிழக மீனவர்கள்  கச்சத்தீவு புனித அந்தோனியார் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இருந்தார். ராமேஸ்வரம் வேர்கோடு புனித ஜோசப் தேவாலய பாதிரியார் வேண்டுகோள் படி, தமிழகத்தை சேர்ந்த 100 யாத்ரீகர்கள் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய விழாவிற்கு செல்ல விருப்பம் கொண்டிருந்தது தெரிய வந்தது. இருப்பினும், தமிழகத்தில் இருந்து 20 பக்தர்கள் மட்டுமே தடையில்லாமல் கச்சத்தீவு ஆலய பிரதிஷ்டை விழாவுக்கு செல்ல முடியும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் 5-12-2016 அன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.

இந்தநிலையில் தான், தமிழக முதல்வர், நமது போற்றுதலுக்குரிய தலைவர் புரட்சித்தலைவி அம்மா மரணம் அடைந்த துரதிர்ஷ்ட நிகழ்வு ஏற்பட்டது. அவரது மறைவு செய்தி தெரிவிக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசால் புனித அந்தோனியார் ஆலய பிரதிஷ்டை விழா ஒத்திவைக்கப்பட்டது இந்த ஆலயத்தின் மறு பிரதிஷ்டை விழாவுக்கான  நாள் அறிவிக்கப்படவில்லை.

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயம் தமிழகத்தின் இலட்சக்கணக்கான மீனவ பக்தர்களின் கலாச்சார, மத உணர்வுகளுடன் தொடர்பு கொண்டது.  அவர்களில் அதிக அளவில்  கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழாவில் பங்கேற்க ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். இந்த நிலையில், 20 பேர் மட்டுமே தமிழகத்தில் இருந்து பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. தமிழக மீனவர்களின் கலாச்சாரம், மத பாரம்பரியத்துடன் ஒரு அங்கமாகவே கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.

எங்களது போற்றுதலுக்குரிய தலைவர் புரட்சி தலைவி அம்மாவும் கடந்த 14-5-2016 அன்று தங்களுக்கு (பிரதமர்) எழுதிய கடிதத்தில் புனித அந்தோனியார் தேவாலயத்தை இந்தியா, இலங்கை கூட்டாக கட்ட வேண்டும். இந்த ஆலயம் இரு நாடுகளின் மீனவர்களின் கூட்டு பாரம்பரியமாக இருப்பதால் கூட்டாக இணைந்து கட்ட வேண்டும் என கூறியிருந்தார். பிரார்த்தனைக்கு மிக முக்கிய தலமாக உள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்லும் பாரம்பரிய, சம்பிரதாய முறையை பாதுகாப்பதிலும் தமிழக மீனவர்கள்  மிகுந்த கவனம் கொண்டிருக்கிறார்கள்.

உணர்வுகளுடன் தொடர்புடைய இந்த தேவாலய விழாவில், தமிழக மீனவர்களின் உரிமையையை கருத்தில் கொண்டு புனித அந்தோணியார் தேவாலய பிரதிஷ்டை விழாவில் தமிழக மீனவ பக்தர்கள் எண்ணிக்கையில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல்   கலந்து கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க, தாங்கள் (பிரதமர் ) அறிவுறுத்த வேண்டுகிறேன். இவ்விவகாரம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அந்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்று இந்திய ஊடகம்  ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

c0c071fc541f1d47d5912a4dc0b02d93_XL (1)

Related posts: