எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதற்றத்தைத் தூண்டும் செயலில் பாதுகாப்புப் படை ஈடுபடாது – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Wednesday, May 11th, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண நிலையை அடுத்து பொலிசார் மற்றும் இராணுவத்தினர் பல்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் போராட்டக்காரர்கள் வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவும் படைத்தரப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படை ஒரு போதும் ஈடுபடாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினர் ஊடாக பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவர்களை குழப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளமை உண்மைக்கு புறம்பானது எனவும் அவரது கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதனிடையே இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிறுத்தப்பட்டுள்ளன என இராணுவம் அறிவித்துள்ளது.

பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு தனது படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

இலங்கை இராணுவ விசேட படையணியின் போர் ரைடர்ஸ் படையானது இலங்கை இராணுவத்தின் அனைத்து வீதித் தடைகளையும் உள்ளடக்கி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

மேலும், அதுருகிரிய, கொடகம மற்றும் ஹோமாகம பகுதிகளில் நடமாடும் ரோந்துப் பணிகளுக்காக கவச வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பின் பல வீதிகளில் இராணுவ வாகனங்கள் இன்று காலைமுதல் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக அமெரிக்க இராஜாங்கத்  திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: