காலத்திற்கு ஒவ்வாத நிர்வாக முறைமை காரணமாக முற்போக்கான தலைமைத்துவம் செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது – நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Friday, April 15th, 2022

மக்கள் ஏன் அரசாங்கத்தின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்கு புரிகிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போது கோபத்திற்கான நேரம் மட்டுமல்ல, தீர்வுக்கான நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின்போதே நாமல் ராஜபக்ஷ,  இவ்வாறு தெரிவித்துள்ளார்..

மேலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் நாட்டிற்கான திட்டங்கள் குறித்து இன்னும் வெளிப்படையாக குரல் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான அவரது திட்டங்கள் குறித்து விளக்கமளித்திருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கையில் திட்டமிடப்பட்ட மாற்றங்களின் அவசியம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச காலத்திற்கு ஒவ்வாத நிர்வாக முறைமை காரணமாகவும் அதிகாரிகள் மட்ட நடவடிக்கை காரணமாகவும் முற்போக்கான தலைமைத்துவம் செயற்பட முடியாத நிலை காணப்பட்டது என தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தேவையான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்பதையும் ஜனாதிபதியின் மௌனம் தற்போதைய நிலைமைக்கு உதவவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்ட நாமல் ராஜபக்ச, “ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் உரிமையை என்றாலும் அத்தகைய கோபம் பயனற்றதுடன், அது நெருக்கடியை உருவாக்கக்கூடும் என்றும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவக்கூடிய சுற்றுலாப்பயணிகள் வருகையை தடுத்து நிறுத்தும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: