எரிபொருள் மோசடியில் தனியார் பேருந்து சாரதிகள் – விசாரணை நடத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்பு!

Tuesday, July 5th, 2022

தனியார் பேருந்து சாரதிகள் மேற்கொள்ளும் எரிபொருள் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 105 டிப்போக்களினூடாக தனியார் பேருந்துகளுக்கு பயணிகள் போக்குவரத்திற்காக எரிபொருள் வழங்கப்பட்டது.

எனினும் தனியார் பேருந்து சாரதிகள் பயணிகளை ஏற்றிச் செல்லாமல் எரிபொருளை மோசடியாக பெற்று விற்று வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கு பல்வேறு பிரதேசங்களிலிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்துமாறு அமைச்சின் செயலாளர் ஆர். டபிள்யூ. ஆர். பிரேமசிறிக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி இ.போச. டிப்போக்களினூடாக 5500 தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்ட போதிலும் 3000 க்கும் குறைவான பேருந்துகளே இயங்கியதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இது தொடர்பில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற் கொண்டு பொதுப் போக்குவரத்து சேவையை பேணுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை ,தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை வழங்கினாலும் தனியார் பேருந்து சாரதிகள் எரிபொருளை பெற்றுக் கொண்டு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடாமல் மோசடி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் அனைத்து வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் துரிதமான முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக 5 வீதம் வரையிலான தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாக தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தங்களுக்கு போதுமான எரிபொருள் இ.போ.ச டிப்போக்களினூடாக வழங்குவதில்லை எனவும் அவை குற்றஞ்சாட்டியிருந்தன. ஆனால் எரிபொருளை பெற்று தனியார் பேருந்துகள் மோசடி செய்வது அம்பலமாகியுள்ளதாக அறிய வருகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: