உரமானியக் கொடுப்பனவு தாமதத்தால் பயிருக்கு உரத்தை பயன்படுத்த முடியவில்லை – விவசாயிகள் கவலை!

Friday, December 2nd, 2016

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு அரசினால் வழங்கப்படும் உரமானியக் கொடுப்பனவிற்கான பணம் இதுவரை கிடைக்கப்பெறாததால் தமது பயிருக்கான உரத்தை உரிய நேரத்தில் பயன்படுத்த முடியாமல் கஷ்டமடைவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இம் மாவட்டத்தில் உரிய கமநல சேவை நிலையங்களின் மூலமாக விவசாயிகளின் உரமானியப் பட்டியல்கள் கிளிநாச்சி மாவட்ட கமநல சேவை நிலையத்திற்குக் கிடைக்கப்பெறாத நிலையினால் அவற்றைத் தொகுத்து அனுப்பப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் 5 ஏக்கர் காணிக்கு ஒர விவசாயிக்கு உரமானியம் வழங்கப்படும் என்ற அரச சுற்றுநிருபம் உள்ளபோதிலும் சில விவசாயிகளால் ஒரே பெயரில் வெவ்வேறு கமநல சேவை நிலையங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாலும் சிக்கல் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தைப் போலன்றி வங்கிக் கணக்கு தனிக் கணக்காக இருக்க வேண்டும். கூட்டு வங்கி கணக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தற்போது தான் கமநல சேவை நிலையங்களுக்கு அறிவித்தல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவ்வறிவித்தல் உரமானியக் கொடுப்பனவை மேலும் தாமதமடையச் செய்யும். இவ்வாறான இழுபறியான நிலையை விட உரத்திற்கான குறைந்த விலையில் விலைக்கட்டுப்பாட்டை விதித்து விவசாயிகளுக்கு நன்மையை ஏற்படுத்தலாம் என விவசாயிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே உரிய அதிகாரிகள், அரசியலாளர்கள் இவ்விடயத்தில் கூடிய கரிசனையெடுத்து விவசாயிகளின் நலனுக்கு உதவ வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

fertilizer-720x480

Related posts: