அர்த்தமற்ற இனவாதம்? – அமைச்சர் காமினி விஜித் விஜய்முனி சொய்சா

Friday, May 20th, 2016

‘முன்னைய அரசாங்கத்தில் 11 ஆயிரம் இளைஞர்களை விடுதலை செய்யும் போது வாயை மூடிக்கொண்டு இருந்த தென்னிலங்கை இனவாதிகள், தற்போதைய அரசாங்கம் மீதமுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய முயற்சிக்கும்போது இனவாதம் பேசுகின்றார்கள். ஆகவே, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப இனவாதம் பேசும் அரசியலுக்கு மத்தியில் நாடு உள்ளது’ என நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜய்முனி சொய்சா தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சின் நீர்வள சபையின் வடக்கு மகாண அலுவலகம், யாழ். பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டது. அந்த அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘

முன்னைய அரசில், 11 ஆயிரம் இளைஞர்கள் விடுதலை செய்யபட்டனர். அப்போது தென்னிலங்கை இனவாதிகள், இனவாதம் பேசவில்லை.

ஆனால், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீதமுள்ள இளைஞர்களில், குறைந்தளவில் குற்றம் செய்தவர்களை விடுதலை செய்த போது அரசு பயங்கரவாதிகளை விடுதலை செய்கின்றது என்று இனவாதம் பேசுகின்றார்கள்.

கடந்த 2015ஆம் ஆண்டு நான் வனவளப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது, யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டேன். அப்போது இங்குள்ள குளங்களின் நிலைமைகளை பார்வையிட்டேன். இவற்றை சீர்செய்தால் நீர்வளம் சிறப்பாக இருக்கும் என எண்ணினேன். அதிஷ்டவசமாக தற்போது இவ்வமைச்சு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத்துக்கு தேவையான நிதிவளம் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் பெற்று தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு தேவை’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: