அரச நிர்வாக மட்டத்திலான அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்துள்ளதாக தகவல்!.

Monday, May 6th, 2024

அரசாங்கத்தின் நிர்வாக மட்டத்திலான அதிகாரிகள் சுமார் 200 பேர் அவர்களுக்கு வழங்கப்பட்ட வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழான ‘லங்காதீப‘ செய்தி வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

சில நாட்களுக்கு முன்னர் தங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களைப் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் இரண்டு தொடக்கம் மூன்று இலட்சங்களுக்கு, வாகன விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னரே வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முன் அரசாங்கத்தின் நிர்வாக மட்டத்திலான அதிகாரிகளுக்கு வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்க அரசாங்கத்தின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலாவதாக வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டால், தவறான ஒரு கண்ணோட்டம் சமூகத்தில் பரவ வாய்ப்புள்ளது. இதன் காரணத்தினால், முதலாவதாக அரசாங்கத்தின் நிர்வாக மட்டத்திலான அதிகாரிகளுக்கு வழங்கிய பின்னர் அமைச்சர்களுக்கு வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவது சிறந்ததாக இருக்கும் என பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் யோசனைகளை பரிந்துரைத்துள்ளனர்.

இதேவேளை, அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை ஒத்த ஒரு வாகன அனுமதிப்பத்திரத்தையாவது தமக்கு வழங்குமாறு அமைச்சர்கள் சிலர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, அரசாங்கத்தின் நிர்வாக மட்டத்திலான அதிகாரி ஒருவருக்கு வழங்கப்படும் வரியற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரமொன்றின் பெறுமதி சுமார் 25 இலட்சமாகும்.

வாகன இறக்குமதியை தடை செய்ததையடுத்து, அரசாங்கத்தின் அநேக நிர்வாக மட்ட அதிகாரிகளுக்கு குறித்த வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை அருகில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துவதாக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர்களுள் வைத்தியர்கள், பொறியிலாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் அதிகளவில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: