துருக்கியில் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023

துருக்கியில் பாரிய நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு 9 இலங்கையர்கள் உள்ளதாகவும் அவர்களில் 8 பேருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர்களுடன் தொடர்ந்தும் இலங்கை தூதரகம்; தொடர்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மற்றுமொரு நபரான பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதுடன் நிலஅதிர்வில் சேதமடைந்த கட்டிடத்தில் குறித்த நபர் இருந்திருக்கவில்லை எனவும் துருக்கிக்கான இலங்கை தூதுவர்; தெரிவித்தார்.

முன்னதாக குறித்த பெண் சேதமடைந்த கட்டிடத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் அவர் அங்கு இருந்திருக்கவில்லை என தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் துருக்கிக்கான இலங்கை தூதுவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அங்கு பல பின்னதிர்வு உணரப்பட்டுள்ளதுடன் இறுதியான 7.5 மெக்னிடியூட் அளவில் பின்னதிர்வு உணரப்பட்டது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 2.50 அளவில் இந்த பின்னதிர்வு ஏற்பட்டுள்ளதுடன் அங்காரா வரையில் இது உணரப்பட்டதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர்; அசாந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தெற்கு துருக்கி மற்றும் வட சிரியாவை தாக்கிய 7.8 மெக்னிடியூட் அளவிலான முதலாவது நில அதிர்வில் ஆயிரத்து 3500 இற்கும் அதிகமானோர் பலியானதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலாவது நில அதிர்வு துருக்கியை தாக்கியதன் காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதாக துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். இது தவிர 5 ஆயிரத்து 300 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சிரியாவில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பலியானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரு நாடுகளிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றாக அழிந்து போயுள்ளன. அத்துடன் பல பகுதிகளில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளுக்கு இடையே அகப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியாளர்கள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.

துருக்கி, சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த இரு நில அதிர்வுகளையும் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

உலக தலைவர்களின் வேண்டுகோளுக்கு அமைய பல நாடுகள் அத்தியாவசிய உடனடி தேவையான பொருட்களை அனுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

இதன்படி, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, ஈரான், இந்தியா, ரஷ்யா, கட்டார் மற்றும் யுக்ரைன் உள்ளிட்ட நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கான உதவியை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: