அரசு தமிழ் மக்கள் தொடர்பாகச் செய்த நல்ல விடயங்கள் என்ன? : சுமந்திரனிடம் கேட்கிறார் சுரேஷ் !

Thursday, June 9th, 2016

தற்போது சுமந்திரன் ஊடகங்களில்  பேசும் போது ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டம் எதிர்வரும்- 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது. 29 ஆம் திகதி இலங்கையின் விடயம் தொடர்பாகவும் ஒரு வாய் மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. அதற்கு முன்பாக ஐ.நா சபைக்குப் போய் ஆணையாளரைச் சந்தித்து இலங்கை அரசாங்கம் இதுவரை செய்த நல்லவற்றையும், இதுவரை செய்யாதவற்றையும்  தாங்கள் கூறவிருப்பதாகத் தெரிவிக்கின்றார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பாகச் செய்த நல்ல விடயங்கள் என்ன? என்பதை ஐ.நா சபைக்கு அவர்கள்  செல்வதற்கு முன்னர் எடுத்துரைத்தால் நன்றாகவிருக்கும் எனத் தெரிவித்தார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

யாழ். ஊடக அமையத்தில் கடந்த  செவ்வாய்க்கிழமை(07-6-2016) பிற்பகல்- 1 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? சம்பூரில் ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருக்கிறது. வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணி என்பது உங்களுக்குத் தெரியும் முன்னைய அரசாங்கம் விடுவிப்பதற்கெனத் தீர்மானிக்கப்பட்டிருந்த காணிகள் மட்டுமல்ல பாராளுமன்றத்தில் பிரதமர் பேசுகின்ற போது ஏற்கனவே இந்தக் காணிகள் முன்னைய அரசாங்கம் விடுவிக்கத் தீர்மானித்திருந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார். குறித்த காணிகள் கையளிக்கப்பட்ட போது முன்னைய ஜனாதிபதி ராஜபக்ஷவின் கையொப்பமிட்ட  உறுதிகள் தான் கொடுக்கப்பட்டன என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சம்பூரில் 1000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதைத் தவிர அரசாங்கம் தமிழ் மக்களுக்கு என்ன செய்துள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூட்டும் படி கடிதமொன்று எழுதியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக் குழு என்பது கூட்டப்படவில்லை. நாட்டில் இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வில்லை. காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை, இராணுவத்துக்கான குடியிருப்புக்கள் கட்டப்படுகின்றன, சிங்கள மீனவர்கள் குடியேற்றப்படுகிறார்கள், தமிழ் மீனவர்கள் விரட்டப்படுகிறார்கள் போன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக் குழுக் கூட்டம் நீண்டகாலமாகக் கூட்டப்படவில்லை என்பது என்ன மன நிலையில் சம்பந்தன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்? என்கிற கேள்வியை எழுப்பி நிற்கிறது.

ஜனாதிபதி, பிரதமர் முதல் புதிய அரசியல் யாப்புக்கான சீர்திருத்தக் குழுவினர் வரை பல்வேறுபட்ட வகைகளில் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு எதிராகக் காணப்படும் நிலையில் எங்களுடைய எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எனவும் சொல்லப்படுகின்ற சம்பந்தன் தனது கணிப்பின் படி இந்த அரசாங்கம்  எல்லாவற்றையும் செய்யும், ஆகவே, 2016 ஆம் ஆண்டில் தமிழ்மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் பூர்த்தி செய்யும் என்ற அடிப்படையில் தான் செயற்பட்டுக்  கொண்டிருக்கிறார் எனவும் குற்றம் சாட்டினார்.

 

Related posts: