காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை – அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

Friday, October 16th, 2020

எதிர்காலத்தில் நாட்டில் காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களுக்கு வாய்ப்பு உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்கள் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் / அரசாங்க அதிபர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல், ‘நில விவகாரத்தில், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் பாதுகாப்பு செயலர் வலியுறுத்தினார்.

எமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொய்யான பரப்புரைகளை பொருட்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக எமது பணிகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்லவுள்ளோம் என்றும் பாதுகாப்பு செயலாளர் குணரத்ன வலியுறுத்தினார்.

நாரெஹென்பிட்டவில் உள்ள உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், அரசாங்க அதிபர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக கருத்துவெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், ‘கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவும் நிலைமை தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வந்ததன் விளைவாக, உரிய அதிகாரிகளுடன் எங்களால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக ஒருங்கிணைக்க முடிந்தது’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு படைகள், சுகாதாரத் திணைக்களம் மற்றும் அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் காணப்பட்ட முன்னைய கொரோனா வைரஸ் மூன்று அலைகளையும் எம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: