அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க நடவடிக்கை – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க அறிவிப்பு!

Friday, January 12th, 2024

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பெருமளவான சிறார்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் போசாக்கான உணவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், பெருந்தோட்டங்களில் உள்ள பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் 35,000 மாணவர்கள் உள்ளடங்கலாக 100,055 மாணவர்கள் பயன்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாலர் பாடசாலையில் உள்ள மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் உணவுக்காக வழங்கப்படும், 60 ரூபாவை 100 ரூபாயாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“அதேபோன்று, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுப் பைகள் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை 220,214 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மாதம் 4,500 ரூபாய்க்கு 10 மாதங்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பைகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இதே வளை முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் கீழ் 18,333 முன்பள்ளி ஆசிரியர்கள் பதிவுசெய்துள்ளனர்.

அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். முன்பள்ளித் துறையின் தரத்தை மேம்படுத்துவதற்கும், முன்பள்ளி ஆசிரியர்களின் பணியை மதிப்பிடுவதற்கும் மாதாந்தம் 2500 ரூபாய் தற்போது வழங்கப்படுகிறது.

அந்தத் தொகை வாழ்வதற்குப் போதாது, எனவே இத்தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

000

Related posts: