மே மாத கொடுப்பனவு வீடுகளுக்கே சென்று கொடுப்பதற்கு தீர்மானம் – விலகிக் கொள்வதாக கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அறிவிப்பு!

Tuesday, May 5th, 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு முடக்கப்பட்டதை அடுத்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத கொடுப்பனவு கிராம உத்தியோகத்தர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு மக்களை அழைத்து அங்கு வைத்து கொடுக்கப்பட்டது.

எனினும், மே மாதத்திற்கான கொடுப்பனவை பயனர்களின் வீடுகளுக்குச் சென்று கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் கிராம உத்தியோகத்தர்கள், பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று இந்த கொடுப்பனவை வழங்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் எதிர்வரும் 11ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

இதேவேளை, கொடுப்பனவு வழங்கும் செயற்பாடுகளிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றைய தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: