அதிபர்களின் தரத்திற்கு அமையவே படி அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் –  கல்வியமைச்சரிடம் கோரிக்கை!

Saturday, March 11th, 2017

அரச பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்படவுள்ள அதிகரிக்கப்பட்ட படியை பாடசாலை அதிபர்களின் தரத்திற்கு ஏற்ப வழங்க வேண்டும் என கல்வியமைச்சை இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரியுள்ளது

இது தொடர்பாக மேற்படி சங்க செயலாளர் கல்வி அமைச்சர் அகிலவிராஜிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் அதிபர்களுக்கான நிர்வாக படியை அதிகரித்துள்ளமை குறித்து அமைச்சின் முடிவை வரவேற்கின்றோம். தற்போது சில பாசாலைகள் அவற்றின் தரத்தை விட குறைந்த தர அதிபர்களாலும், சில பாடசாலைகள் அவற்றின் தரத்தை விட கூடிய தர அதிபர்ளாலும் நிர்வாகிக்கப்படுகின்றன. அரசியல் தலையீடுகள் காரணமாக தரம் கூடிய அதிபர்களுக்கு பாடசாலைகள் கிடைக்காமல் உள்ளன. கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி 1ஏபி தர பாடசாலையின் அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை அல்லது இலங்கை அதிபர் சேவை 1ஆம் தர உத்தியோகத்தர் இருக்க வேண்டும். 1சிதர பாடசாலை அதிபராக இலங்கை அதிபர் சேவை 1ஆம்தர, 2ஆம் தர சிரேஷ்ட உத்தியோகத்தராக இருக்க வேண்டும். 2ஆம் தர பாடசாலை அதிபராக அதிபர் சேவை 2ஆம் தரத்தவரும் 3ஆம் தர பாடசாலை அதிபராக 3ஆம் தரத்தவரும் அதிபராக இருத்தல் வேண்டும்.

இதற்கு மாறாக தற்போது பாடசாலை அதிபர்கள் அரசியல் செல்வாக்காலும் அதிகாரிகளின் செல்வாக்காலும் நியமிக்கப்பட்டுள்ளனர். சில கல்வி வலயங்களில் கடமை நிறைவேற்று அதிபர்களான இருந்த மிகை ஊழிய அடிப்படையில் அதிபர் சேவைக்கு நியமிக்கப்பட்டவர்களும் 1ஏபி, 1சி தர பாடசாலை அதிபர்களான அரசியல் செல்வாக்கால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அதிகரிக்கப்பட்ட அதிபர் படியை வழங்க முன்னர் இக் குளறுபடிகள் யாவும் சீர் செய்யப்பட்டு அதிபர்களின் தரம், தகைமைக்கேற்ற பாடசாலை அதிபர்கள் நியமிக்கப்பட வேண்டும். குறிப்பாக பாடசாலை தரம் கவனத்திற் கொள்ளப்படாது அதிபர்களின் தரம் கவனத்திற் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட படி வழங்கப்பட வேண்டும்.

Related posts: