600 ஹெக்டேர் காணியில் கெளதாரிமுனையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் திட்டம் அமையும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 17th, 2022

கிளிநொச்சி – பூநகரி கெளதாரிமுனை தெற்கு கடற்கரை பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்படவுள்ள பிரதேசத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் சேபாலவும் நேற்று (15) மாலை பார்வையிட்டிருந்தனர்.

இதன்போது, திட்டம் தொடர்பில் அதிகார சபையின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய வகையில் இந்த திட்டம் அமையும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் 240 மெகாவாட் மின்சாரம் இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக ரஞ்சித் சேபால தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்காக 600 ஹெக்டேர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் எஞ்சியுள்ள காணிகளை மக்களின் விவசாய செயற்பாடுகளுக்காக விடுவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள கௌதாரிமுனை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாகும். இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபை, கௌதாரிமுனை தெற்கு கடற்கரையில் காற்றாலை மின் திட்டத்தை முன்னெடுப்பதற்கான காணியை ஒதுக்கித்தருமாறு பூநகரி பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளது.

குறித்த பிரதேசத்தில் காணி சுவீகரிப்பதற்காக 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி வர்த்தமானியும் வெளியிடப்பட்டது.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்திற்கான கள ஆய்வினை மேற்கொள்வதற்கு இரண்டு இந்திய பிரஜைகளுக்கு அனுமதி வழங்குமாறு கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபை பூநகரி பிரதேச செயலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தது.

பூநகரி கௌதாரிமுனையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தினை பார்வையிடுவதற்காக மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அதிகார சபையின் அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது, மண்ணித்தலை இறங்குதுறையில் இருந்து படகு மூலம் சென்ற அதிகாரிகள் கண்ணா தீவு, மாந்தீவு பகுதிகளையும் பார்வையிட்டனர்.

இந்திய அரசங்கத்தின் ஜல சக்தி அமைச்சின் கீழ் உள்ள வெப்கோஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கடந்த மாதம் கௌதாரிமுனை பகுதிக்கு சென்று மக்களை சந்தித்திருந்தார்.

அத்துடன், இந்திய ஜல சக்தி அமைச்சின் கீழ் இயங்கி வரும் உப நிறுவனமான வெப்கோஸ் நிறுவனமும் இலங்கையின் CEA நிறுவனமும் இணைந்து பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கான சமூக சுற்றுச்சூழல் அறிக்கையினை தயாரிக்கும் பணியினை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பொருட்டு, கௌதாரிமுனை பகுதியிலுள்ள இல்லங்கள்தோறும் சென்று குறித்த திட்டம் தொடர்பில் இவர்கள் தெளிவுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

குற்றவாளிகளை நாட்டுக்குள் கொண்டுவரும் நிலையான சட்டங்கள் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலிய...
மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை - அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உடுவில் பிரதேச அபிவிருத்திக் கு...
ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் பச்சிலைப்பள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் வருமானம் மூன்று இலட்சம...

சர்வதேச அரங்கில் ஈ.பி.டி.பி. கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகினறன - அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை துறையில் நிலையான அபிவிருத்தியை எட்ட தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளை...
மக்களின் வாழ்க்கை முறைமைக்கும் வாழ்வாதாரத்திற்கும் நன்மை தரக் கூடிய திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி – ...