சர்வதேச அரங்கில் ஈ.பி.டி.பி. கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகினறன – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Friday, March 19th, 2021

மாகாண சபைகளை முழுமையாக அமுல்ப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண முடியும் என்ற ஈ.பி.டி.பி. இன் நீண்ட கால வலியுறுத்தல் தற்போது சர்வதேச தளங்களில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, ஜெயபுரம் கிராமத்தில் வன வளப் பாதுகாப்புத் திணைக்களதிடம் இருந்து விடுவிக்கப்பட்ட வயல் காணிகளை மக்களிடம் கையளிக்கும் இன்றைய (19.03.2021) நிகழ்வில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மாகாண சபை முறைமையை பூரணமாக அமுல்ப்படுத்த வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அண்மைய அமர்வில் இந்தியாவினால் வலியுறுத்தப்பட்டதை சுட்டிக் காட்டிய கடற்றொழில் அமைச்சர், ஈ.பி.டி.பி. நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமல் போனவர்களின் உறவினர்களை ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்று அவர்களுக்கான பரிகாரங்களை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய இந்த முயற்சி பாதிக்கப்பட்டவர்களுக்கானதே அன்றி பதாகைகளை கைகளில் ஏந்தி அரசியல் செய்கி்ன்றவர்களுக்கானது அல்ல எனவும்  தெரிவித்தார்.

மக்கள் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு சரியான வழியில் பயணிப்பதன் மூலம் மாத்திமே மக்கள் தங்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு பினனர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் ஜெயபுரம் கிராமத்தில் உள்ள மேட்டு நிலங்களில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட நிலையில், வன வளப் பாதுகாப்புத் திணைக்களத்தினால்    குறித்த காணிகள் கையகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்தினையடுத்து கடற்றொழில் அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை தொடர்ந்து குறித்த காணிகள் மக்களுக்கு  வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், முதற் கட்டமாக நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு  இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏனையவர்களுக்கும் வழங்கி வைக்கப்படவுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

Related posts: