ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவை ஆதரிப்பது இதற்காகத்தான் – கூறுகிறார் டக்ளஸ் எம்.பி.!

Monday, August 26th, 2019


நாட்டில் தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பரப்புர்ரைகள் சூடுபிடித்துள்ள நிலையில் இம்முறை இரண்டு பிரதான வேட்பாளர்களே ஜனாதிபதி தேர்தலில் போட்டியாக இருக்கவுள்ளன். அதில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஒருவரும் பொதுஜன பெரமுன சார்பில் ஒருவரும் களமிறங்கவுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் யார் என்பதில் இழுபறிநிலை காணப்படும் நிலையில் கோட்டபாய ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்தகால அனுபவங்களையும் வரலாறுகளையும் கொண்டு பார்க்கின்றபோது யார் ஆட்சிக்கு வந்தால் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு முடியுமானவரை தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அண்மையில் எமது கட்சியின் நிலைப்பாட்டுடன் நாம் கோட்டபாய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் விதமாக அந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது. அதுமட்டுமல்லாது கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஆட்சி செய்த போது நான் போதியளவு அரசியல் பலமற்ற நிலையில் ஓர் அமைச்சராக இருந்து அவரிடமிருந்து தமிழ் மக்களின் தேவைகள் அபிலாசைகள் பலவற்றுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுத்திருந்திருக்கின்றேன்.

ஆனால் இன்று ஆட்சியை தாங்கிப்பிடிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது தேவைப்பாட்டை தவிர மக்களுக்கானதெதனையும் செய்து கொடுப்பதாக தெரியவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் ஆழும் தரப்பினரும் விரும்பியிருக்கவில்லை.

ஆனால் அன்றைய மஹிந்ர ராஜபக்ச அரசு நான் கோரிய பல விடயங்களுக்கு தீர்வுகளை பெற்றுத் தந்திருக்கின்றது.

அந்தவகையில் என்னால் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வை பொதுஜன பெரமுனவுடன் பங்காளிகளாவதன் மூலம் பெற்று தரமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்தவகையில் பொதுஜன பெரமுனவின் வெற்றியில் எமது கட்சியின் பங்கும் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் அக்கட்சியின் வேட்பாரான கோட்டபாய ராஜபக்சவை ஆதரிப்பதற்கு நாம் முடிவு செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் வை.தவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:

ஊழல் மோசடிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு,  வட மாகாண முதலமைச்சருக்கு கீழான அமைச்சுக்களையும் விசாரிக்...
மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!! இதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - நாடளுமன்றத்தில் ட...
அசாதாரண நிலை - கடற்றொழில் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் ஆராய்வு!