காணிகளை கையகப்படுத்திக் கொண்டால் எமது மக்கள் வாழ்வது எங்கே? வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வது எங்கே?

Wednesday, May 23rd, 2018

பாதுகாப்புத் தரப்பினர் ஒருபுறம், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஒருபுறம், தொல்பொருள் திணைக்களத்தினர் ஒருபுறம், வனவளத் திணைக்களத்தினர் ஒருபுறம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் ஒருபுறம் என அனைத்துத் தரப்பினரும் காணிகளை கையகப்படுத்திக் கொண்டால், எமது மக்கள் வாழ்வது எங்கே? வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வது எங்கே? எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய சூழல் சட்டத்தின் கீழான 7 கட்டளைகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் –

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த கால யுத்தம் காரணமாக மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்களான முல்லைத்தீவு மாவட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் குடியிருக்க வீடுகள் இன்றி இருக்கின்ற நிலையில், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தினை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் முறிகண்டி, மாங்குளம் பகுதிகளில் ஒதுங்கியிருந்த அரச காணியில் அத்திவாரமிட்டு, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவிருந்த நிலையில், வனவளத் திணைக்களத்தினர் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அங்கே பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை மிகவும் மோசமான முறையில் நடத்தியிருக்கின்றனர். இவ்வாறு எமது மக்களது காணிகள் உட்பட பெரும்பாலான காணிகளை வனவளத் திணைக்களத்தினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே கையகப்படுத்தியிருக்கின்றனர்.

1983ஆம் ஆண்டு தென் பகுதியில் ஏற்பட்டிருந்த இனக் கலவரங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்டு ஜெயபுரம் எனும் கிராமம் உருவாக்டகப்பட்டு, இங்கு குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களுக்கென தேவன்குளத்தின் கீழ் 548 ஏக்கர் வயல் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த கால யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த மேற்படி வயல் நிலத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கென தற்போது அங்கு குடியிருக்கின்ற சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்தோர் 2010ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்து வருகின்ற போதிலும் வனவளத் திணைக்களத்தினர் அதற்கு தடையாக இருந்து வருகின்றனர்.

நான் இங்கு குறிப்பிடுவது ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இதைப் போன்று வனவளத் திணைக்களத்தின் கெடுபிடிகள், தடைகள் காரணமாக வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் பெரும்பாலான எமது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றதுஎன அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

வரலாற்றை மறைத்தால் தேசிய நல்லிணக்கம் பகற் கனவாகிவிடும் -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!
புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் : கடற்தொழில் நீரியல் வள அமைச்சராக பொறுப்பேற்றார் டக்ளஸ் தேவானந்தா...
இந்திய அரசின் உதவியுடன் தீவக மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - அமைச்சர்...

வடக்கில் சில தமிழ் அரசியல் வாதிகளால் மணலுக்கான செயற்கைத் தட்டுப்பாடு  ஏற்படுத்தப்பட்டுள்ளது - செயலாள...
கடலுணவுகளை களஞ்சியப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் டக்ளஸின் தலைமையில் கடற்றொழிலாளர்களுக்கு...
காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்ட வேலணை சிற்பனை வீதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர...